திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 748 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி பகுதியில் வசிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம். செல்வராஜுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு இதயம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
இவர் கடந்த சில நாள்களாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். இதற்கிடையில், அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பலருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒருசில சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மக்களவை உறுப்பினர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!