திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மத்திய அரசு அத்துமீறி தலையிடுகிறது. கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியின் சேமிப்பு நிதியை மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது.
இந்தப் பணத்தை எதற்காக செலவழிக்கப் போகிறார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் இந்தியப் பொருளாதார நெருக்கடியை மத்திய அரசின் தோல்வி என்பதை பகிரங்கமாக மோடி அரசு ஒத்துக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரின் இஸ்ரேல் பயணம் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் என்ற பழமொழிக்கு நிகராக உள்ளது என விமர்சித்தார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தனிப்பட்ட பயணம் அல்ல; அது அரசு சார்ந்து சென்ற பயணம் என சொன்ன முத்தரசன், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.