தஞ்சாவூர் : கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற காயிதே மில்லத் பேரவை குவைத் நிர்வாகி அப்துல் ரஹீம் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேரா. காதர் மொகிதீன் கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நாடு முழுவதும் 18 மாநிலங்களில் கட்சி அமைப்பு பணிகளை செய்து வருகிறது. 1948ல் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, இதன் தேசிய தலைமையகமாக சென்னை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தற்போது முதன்முறையாக, டெல்லியில் ரூ.28 கோடி மதிப்பீட்டில், புதிய அலுவலகம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் திறப்பு விழா டிசம்பர் மாத இறுதி அல்லது 2025ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருக்கும்.
இந்த விழாவிற்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளோம். அதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார். மேலும், டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் கட்சியின் தேசிய பொதுக்குழுவும் கூடுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ல் தான் நடைபெறவுள்ளது. ஆனால் ஊடகங்களும், நாளிதழ்களும் தற்போது தேர்தல் பணிகளை பல்வேறு கட்சிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் போட்டு வருகிறார்கள். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்ட காலம் தொட்டே ஒரு சில சமயங்களை தவிர, மாநிலத்தில் திமுகவுடன் தான் தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வருகிறோம். நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் தொடரும்.
வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 06 முதல் 08 இடங்களை திமுகவிடம் கேட்டு பெற்று போட்டியிடுவோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, தமிழகத்திற்கு மட்டும் உரித்தானதல்ல, இந்தியாவிற்கே உரித்தானது.
இதையும் படிங்க : "பெண்களின் அழகு கூந்தலில் இல்லை" - முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்!
இதனை அருமையாக முதலமைச்சர் செய்து வருகிறார். எனவே, பிற மாநில மக்களும் இந்த ஆட்சியை பாராட்டுகின்றனர். இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக உளப்பூர்வமாக மட்டுமல்லாது, கொள்கை ரீதியிலான கூட்டணியாகவும் எங்களது ஐயுஎம்எல் திமுக கூட்டணி இருக்கும்.
ஐயுஎம்எல், திமுக ஆகிய கட்சிகள் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சிகள், இடையில் புதிது புதிதாக பலர் வரலாம். அரசியல் கட்சிகள் தொடங்கலாம், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து இப்போது ஜோசியம் கூறுவது பொருத்தமாக இருக்காது. அது சரியாகவும் இருக்காது, அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட பிறகு தான் அவர்கள் குறித்து முடிவு செய்ய முடியும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொடர்ந்து இந்துத்துவா கொள்கைகளையே கொண்டு செயல்படுகிறது. சமீபத்தில் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பில், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக நிற்கிறது என கூறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வீடுகள், கடைகள் அத்துமீறி ஜேசிபி கொண்டு அகற்றப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வருகிறது. இது சட்ட திருத்தமல்ல, வக்ஃபு வாரியத்தை இல்லாமல் செய்யும் சட்டம். இது குறித்து நாடாளுமன்ற ஜேபிசி குழுவில் கூட இதற்கு எங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைய மாற்றங்கள் வரும், எதிர்ப்புகளும் வரும். மத்தியில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து மக்களை அமைதியாக வாழ விடாமல் தொடர்ந்து குழப்பத்துடனேயே வாழும் நிலைக்கு தள்ளுகிறது.
மாநிலங்களில் ஆளுநர்களால் அல்லது சட்டங்களினால் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாது. ஆனால், எல்லா காலத்திற்கும் நீடிக்காது. அமரன் திரைப்படத்தை இஸ்லாமிய அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவிக்கிறதே என்ற கேள்விக்கு, நான் திரைப்படம் பார்ப்பதில்லை. எனவே, அது குறித்து எதுவும் கூற முடியாது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்