திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவான ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகியவை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பாக இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்குவதால் மாணவிகளின் கவனம் திசை திரும்பாமல், கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் எதிர்காலம் வருங்கால மாணவிகள்தான் என்றும் எதிர்காலத்தில் மாணவிகள் உயர் பதவிகளில் அமர வேண்டுமானால் அடிப்படை கல்விதான் முக்கியம் எனவும் அவர் கூறினார். இதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு அரசிதழில் வெளியிட்டதாகக் கூறிய அவர், இனிவரும் காலங்களில் விவசாயிகள் அச்சமின்றி விவசாய பணிகளில் ஈடுபடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், நன்னிலம் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், பள்ளித் தலைமை ஆசிரியர், பெற்றோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘விவசாயிகளுக்கு தாமதமில்லாமல் நெல் கொள்முதல் செய்யப்படும்’ - அமைச்சர் காமராஜ்