திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை, நிவர் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிவதற்கு ஏதுவாக, சட்ரூட்டி வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்டக் கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர் .
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 212 இடங்கள் பாதிப்படையக் கூடிய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள் உள்பட, 249 பள்ளிக்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு உணவு வழங்குவதற்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகள் கண்டறியபட்டு நான்காயிரத்து 713 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு ரேஷன் பொருள்கள் தயாராக உள்ளன. தேவைப்படும் இடங்களுக்கு அவை உடனடியாகக் கொண்டு செல்லப்படும். எந்த நேரத்தில் ரேஷன் கடைகளைத் திறக்கலாம் என சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிவர் புயல்: இன்று மதியத்திற்குள் முகாமிற்கு திரும்ப மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!