திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.பி.ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.
மேடையில் அமைச்சர் காமராஜ் பேசுகையில், ' தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். எங்களுக்கு இரட்டை வேடம் எல்லாம் போடத் தெரியாது, எங்களுக்கு தெரிந்தது எல்லாம் இரட்டை இலையும், இரட்டை தலைவர்களும்தான். ஒன்று எம்ஜிஆர் அடுத்து ஜெயலலிதா அம்மா தான். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து நாங்கள் போடவில்லை. அச்செயல் திமுகவினர் ஆட்சிபுரியும் போதுதான் நடைபெற்றது. மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம் ' எனக் கூறினார்.
மேலும் நிகழ்ச்சிக்கு திருவாரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் குணசேகரன், மாவட்ட உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய,நகர, கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.