தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் அருகேயுள்ள வடகண்டம் ஊராட்சியில் பல்வேறு கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் அனைத்தும் வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனுக்களை திருடிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து குடவாசல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையயும் படிங்க: ‘உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை’ - சந்தீப் நந்தூரி எச்சரிக்கை!