திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம் ஊராட்சிக்குட்பட்ட குறவன் தோப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இம்மக்கள் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் 50 வருடங்களாக சாலையே இல்லாததால் வரப்புகளை சாலையாக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரு சக்கர வாகனம்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் எப்படி வருமென கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இரவு நேரங்களில் பள்ளி மாணவர்கள் டியூசன் செல்லவும் பெண்கள் வெளியில் செல்லவும் யோசிப்பதாக தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி குடிநீர் பிரச்னை இருப்பதால் இவர்களுக்கு ஒரு கைபிடி பம்பு அமைத்துக் கொடுக்கப்பட்டது என்றும், அதிலும் தண்ணீர் கருப்பு நிறமாக வருவதாகவும், அதை குடித்தால் மாணவர்களுக்கும் கிராம மக்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்கள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: வாக்காளர்களுக்கு ஈடிவி பாரத் வாயிலாக கேஜ்ரிவால் வேண்டுகோள்!