திருவாரூர்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருபட்டினம் புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (45) இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அன்னலட்சுமியின் தலையின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் கல்லைத் தூக்கிப் போட்டு நசுக்கி கொலை செய்துள்ளனர்.
இதில் அன்னலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிணமாக கிடந்த அன்னலட்சுமியை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் பேரில் திருபட்டினம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து திருபட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அன்னலட்சுமி, சாகுல் அமீதை அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததால் முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் இல்லை - ராதாகிருஷ்ணன் தகவல்!