திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு தான் வரவேண்டும். இந்தப் பாதையில் இயக்கப்பட்டு வந்த பஸ் பல்வேறு காரணங்களால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைகளுக்கு திருவாரூர் வருவதற்கு கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தப் பாதையில் காட்டாற்று பாலம் அருகில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் ரயில்வே பாதையை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை அகற்றிடும் வகையில், காட்டாற்று கரையில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அமைத்து கீழ்பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் கரையில் கீழ்பாலம் கட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் ரயில்வே கீழ்பாலத்தை 2.5 கோடி மதிப்பில் அமைத்து ஆள் இல்லாத ரயில்வே கேட்டை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு காட்டாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட கீழ்பாலத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் குளம்போல் தேங்கிநின்றது. இடும்பு அளவு உயரம் தண்ணீர் இருந்ததால் நடந்து செல்ல முடியாமலும், வாகனமும் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், காட்டாறு என்பது வடிகால் ஆறாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காட்டாற்றில் அதிக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் செல்லும்போது உடைப்பு ஏற்பட்டு இப்பகுதியில் வயல்கள் நீரில் முழ்கும். இந்த சுழ்நிலையில் ஆற்றின் கரையில் ரயில்வே கீழ்பாலம் கட்டுவதால் தண்ணீர் புகுந்து ஆபத்தான நிலை ஏற்படும். அதனால் மாற்று பாதை அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி மனு அளித்தும் பயனில்லை.
காட்டாற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ரயில்வே கீழ்பாலத்தில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சுமார் மூன்று அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாலத்தை சரி செய்து மக்கள் பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது