திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதை நிச்சயமாக மோடி பரிசீலனை செய்து வழங்குவார்.
நடிகர் கமல்ஹாசன் தன்னை உலக நாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, குடியுரிமை திருத்த சட்டத்தில் உலக அறிவும் தேவை. கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும் தெரியவில்லை, நாடாளுமன்ற நடவடிக்கையும் தெரியவில்லை’ எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் இந்திய குடியுரிமை சட்டத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று ஒரு மாத காலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏறபடுத்த உள்ளோம். அப்போது இச்சட்டம் குறித்து ஸ்டாலினுக்கும் புரியவைப்போம்’ என்றார்.
மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து வரும் நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை!