திருவாரூர்: எதைக் கேட்டாலும் கொடுக்கும் மரத்தைக் கற்பக விருட்சம் என்பர். தமிழ்நாட்டில் கற்பக விருட்சம் என்றாலே, பல்வேறு வகைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை வழங்கும் பனை மரம்தான் நினைவுக்கு வரும்.
அந்தக் கற்பக விருட்சம், கடந்த அரை நூற்றாண்டில் அதிகமான சேதங்களைச் சந்தித்துவிட்டது. இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. இதைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், மறுபக்கம் அழிவைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
பசுமை சூழல் இயக்கம் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில், செங்கல் சூளைகளில் எரியூட்டுவதற்காக பனை மரங்கள் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாகிவருகிறது.
இதைக் கண்டித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் (ஜூன் 21) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரும் முழக்கங்கள் எழுப்பினர்.
உரிய நடவடிக்கை
பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் என அனைத்துத் தரப்பிலும் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தாலும், பனைமரங்கள் வெட்டப்படுவது தொடர்கதையாகிவருகிறது.
விரைந்து பனைமரங்களை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்