திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள உத்திரங்குடி, கீழப்பாலையூர், மஞ்சக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர், " திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பின்படி 89,232-ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இதில் 3,96,675 ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டிற்கான தொகையினை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
எனவே கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் விரைவில் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்படும்.
மேலும், ஆ.ராசாவை பற்றி பேசுவதற்கெல்லாம் நேரமில்லை, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த ராசா கைது செய்யப்பட்டார். அவர் மீது தவறு இருந்ததால்தான் கைது செய்தனர்" என கூறினார்.