திருவாரூர்: நீடாமங்கலம் அருகேவுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழார்வன் (51). இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும், நீடாமங்கலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் தமிழார்வன் நேற்று (நவ.10) மாலை 4 மணியளவில் நீடாமங்கலம் வடக்குவீதி பகுதியில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் தனது காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தமிழார்வனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தமிழார்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தமிழார்வனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
இதற்கிடையே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த தமிழார்வனின் உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.
அங்கு வந்தவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த தமிழார்வனின் உடலைப் பார்த்து மிகுந்த ஆத்திரம் அடைந்து அந்தச் சாலையில் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தனர். அந்தப் பகுதியில் இருந்த கடைகள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
கொலைக் குற்றவாளிகள் கைது
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார், மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொலைக் கும்பலைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.11) தமிழார்வனை கொலை செய்த மாதவன் (34), எழிலரசன் (29), ராஜ்குமார் (33), சேனாபதி (32), மனோஜ் (28) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது