கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து காவிரி டெல்டா விவசாயிகளின் விவசாய பாசனத்திற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 13-ஆம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார்.
தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தூர்வாரும் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வந்ததாலும், பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததாலும் பிரதான ஆறான ஓடம்போக்கியாறு, வெள்ளையாறு, கோரையாறு ஆகியவற்றில் காவிரி தண்ணீர் 20 நாட்களாகியும் வந்து சேரவில்லை.
ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப் படாமல் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது எனவும் தற்போது தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டதிற்கு இன்னும் தண்ணீர் வந்து சேராததற்கு தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கும், முழுமையாக தூர்வாராததுமே காரணம் என்று கூறி மாங்குடி விவசாயிகள் பிரதான ஆறான பாண்டவையாறுக்கு மாலை அணிவித்து, பழம், பத்தி உள்ளிட்டவை வைத்து அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.