திருவாரூர்: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளுக்கு விநியோகம்
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் அரசு, தனியார் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அரவை செய்யப்பட்டு அரசி மூட்டைகளாக தயார் செய்யப்படுகிறது.
பின்னர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.
100 மெட்ரிக் டன் உற்பத்தி திறன்
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக திருவாரூர், சுந்தரகோட்டை ஆகிய இரண்டு இடங்களில் நவீன அரிசி ஆலை செயல்பட்டு வந்தது. இதில் திருவாரூரில் உள்ள நவீன அரிசி ஆலை நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த அரிசி ஆலை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நவீனமயமாக்கப்பட்ட அரிசி அலையாக மாற்றப்பட்டு நரிமனத்திலிருந்து இயற்கை எரிவாயு (கேஸ்) மூலம் செயல்படுத்தும் வகையில் புதிதாக கட்டுமான வசதிகள் செய்யப்பட்டது.
இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே அங்கு அரவைப் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆலை திறக்க கோரிக்கை
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆலை செயல்படாமல் மூடிக்கிடப்பதால் கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து இயந்திரங்களும் பழுதடைந்துள்ளது.
எனவே நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் அளவில் அரவை திறன் கொண்ட நவீன அரிசி ஆலையை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து