திருவாரூர்: நெற்பயிர் காப்பீடு நீக்கம் குறித்து நேற்று முன் தினம் (ஆக.22) தமிழ்நாடு அரசு வேளாண் துறை செயலர் மூலம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய விவசாயிகள், “தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு நெல் சாகுபடிகள் முழுமையாக அழிந்து வருவது தொடர்ந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
வஞ்சிக்கும் செயல்
மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தில் லாபம் பெறும் நோக்கோடு செயல்படுவதால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை செல்வதில்லை. எனவே தமிழ்நாடு அரசு தனக்கென தனி நெல் காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றோம்.
மேலும் நெல்லுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விவாதிக்காமல், சட்டப்பேரவை நடைபெறும் நிலையில் வேளாண் துறை செயலாளர் மூலம் அறிக்கை வெளியிடுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
மீண்டும் செயல்படுத்த வேண்டும்
2020-21ஆம் ஆண்டிற்கான நெற்பயிர் காப்பீட்டிற்கு தடை விதித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்பிற்கு தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு, நெல்லுக்கான காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் கைது!