திருவாரூர்: காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதி மாவட்டமான திருவாரூர் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். இம்மாவட்டத்தில் குறுவையைத் தொடர்ந்து தாளடி, சம்பா சாகுபடி பணிகள் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக மன்னார்குடியைச் சுற்றியுள்ள குளசேந்திரபுரம், தென்பரை, பைங்காநாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக விவசாயிகள் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே கடன் வாங்கியும், வீட்டில் உள்ள பொருள்களை அடைமானம் வைத்தும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவுசெய்து பாடுபட்டு பயிரை ஆளாக்கி அறுவடைக்காகக் காத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் கடந்த டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று நாள்கள் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நிலத்தில் சாய்ந்ததோடு முளைக்கத் தொடங்கின. இந்நிலையில் இத்தகைய பயிர்களை அறுவடை செய்தாலும் நெல்மணிகள் கிடைக்காமல் பதராக அதாவது எதற்கும் தேராத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுதவிர நெற்கதிர்கள் வயல்களிலே சாய்ந்து கிடப்பதால் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நல்ல செழிப்புடன் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி இருப்பதைக் கண்ணால் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்த விவசாயிகளுக்கு இயற்கையின் தொடர் இடர்பாட்டால் கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் விவசாயிகள் மன வேதனைக்கு உள்ளாகிச் செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக ஆய்வுசெய்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அதைபோல் அரசின் நிவாரணம் என்ற ஆதரவு பார்வைபட்டால் மட்டுமே மன்னார்குடி பகுதியில் சுற்றுப்புற கிராம விவசாயிகளை ஓரளவாவது பாதுகாக்கலாம் என்பதோடு, எதிர்காலத்தில் விவசாயத்தில் ஒருபடிப்பினை ஏற்படுத்த முடியும் என விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: குன்னூரில் 10 மாதங்களாக வீதியில் வசிக்கும் பழங்குடியினர்: கவனிக்குமா அரசு?