திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021-குறுவைத் தொகுப்புத் திட்டம் குறித்து உழவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
“உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. அந்தவகையில் இந்தாண்டு குறுவைத் தொகுப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விதைகள், உரங்கள், பசுந்தாள் உர விதைகள், நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் உள்ளிட்டவை உழவர்களுக்கு மானியத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
இதனை உழவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் வழங்கப்படும் பொருள்களை உழவர்கள் மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல் சான்று தேவைப்படுவதால் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் அந்தந்தப் பொறுப்பு கிராமங்களிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும்.
மேலும் உழவர்கள் சிட்டா, அடங்கல் சான்றினைக் கேட்கும்போது காலதாமதமின்றி உடனடியாகச் சாகுபடி விவரத்தினை அடங்கலில் பதிவுசெய்து, பதிவுசெய்யப்பட்ட விவரத்தினை உடனடியாக உழவர்களுக்கு வழங்கிட வேண்டும்” எனக் கூறினார்.
இதையு படிங்க: 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள்: இதுவரையில் நடந்தது என்ன?