திருவாரூர்: மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, " தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் கடந்த 17ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார். காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார்.
உருவபொம்மை கொளுத்தப்படும்
இந்நிலையில், நேற்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது, கட்டியே தீருவேன் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதற்கான அனுமதி கொடுத்துள்ளதாக கூறியதையும் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சரும், பிரதமரும் சந்தித்த மறுகணமே சட்டத்திற்கு விரோதமாக சந்திப்பை கேவலப்படுத்தும் விதமாக அறிவிப்பை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதனைக் கண்டித்து அடையாளப்படுத்தும் விதமாக அவரது உருவபொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அவசர வழக்கு
கர்நாடகா முதலமைச்சர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடு அண்டை மாநில உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார். இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகிறார். பிரதமர் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு நடந்த உடனேயே இப்படி தெரிவிப்பது யார் பின்புலத்தில் இவர் செயல்படுகிறார்? யார் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் பிரதமர் அலுவலகம் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் இனியும் காலம் கடத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
சுயநல அரசியல்
கர்நாடகா மக்களும், தமிழ்நாடு மக்களும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம். ஒற்றுமையை மேம்படுத்தவும் முயற்சிக்கிறோம். ஆனால், சுயநல அரசியல் லாபத்திற்காக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செயல்படுவது தமிழ்நாடு கர்நாடக மக்களின் உறவுகளை மறைமுகமாக சீர்குலைக்க முயற்சிப்பதாக உள்ளது.
எனவே, ஒன்றிய அரசாங்கம் இதனைத் தடுத்து நிறுத்த முன் வருவதோடு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து எடியூரப்பா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்