திருவாரூர்: மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பிரதானத் தொழிலாகக் கொண்டு விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பா, தாளடி, குறுவை, கோடை சாகுபடியான பருத்தியும், பயறு உளுந்து வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில், அதற்கு அதிகளவில் போர்வெல் உபயோகித்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், "திருவாரூர் மாவட்டத்தில் பிரதானத் தொழிலான விவசாயம்தான் இருக்கிறது. அதன் முக்கியமான ஆதாரமாக மேட்டூர் தண்ணீரை நம்பியே 60 விழுக்காடு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மீதமுள்ள 40 விழுக்காடு விவசாயிகள் போர்வெல் கொண்டு சாகுபடி செய்து வருகிறோம்.
போர்வெல் மின்சாரம் இருந்தால் மட்டுமே இயங்கக் கூடிய வகையில் உள்ளதால் முன்னாள் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பால், தற்போது கோடை சாகுபடியான பருத்தி சாகுபடியை அடுத்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் தற்போது மும்முனை மின்சாரம் கிடைக்காமல் மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருவதால், பருத்திக்கும் தண்ணீர் வைக்க முடியாமல் காய்ந்து வருகிறது. அதேபோல் குறுவை சாகுபடிப் பணிகளும் பாதியில் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் தடையில்லாமல் மும்முனை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பில்லை’ - அமைச்சர் ரகுபதி