கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை கூலி தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவித்து வரும் நிலையில் இவர்களுக்கு பல்வேறு கட்சியினரும், தொண்டு நிறுவனத்தினரும் இலவசமாக நிவாரணப் பொருட்களையும், காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்போர் ஊராட்சிக்கு உள்பட்ட கடுவங்குடி கிராமத்தைச் சேர்ந்த 120 ஏழை குடும்பங்கள் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இரண்டு மாத காலமாக வேலையிழந்து தவித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு உதவிடும் வகையில் திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ராஜமோகன் தனது ஒரு மாத ஊதியத்திலிருந்து அவர்களுக்கு அரிசி மளிகை பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பை அந்த பகுதி மக்களுக்கு வழங்கினார்.