திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். நகை கடை நடத்தி வரும் இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மைதிலி(29) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மைதிலி அவரது குடும்பத்திற்கு ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தவர். அவருடன் பிறந்த மூன்று சகோதரர்களும் திருமணத்தின் போது 50 பவுன் நகை, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கியுள்ளனர்.
இது போதாது என்று மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். மேலும் இரண்டு தினங்களுக்கு முன், கார் வழங்கக்கோரி அருண் சண்டையிட்டார். இதனை தனது சகோதரர்களிடம் மைதிலி தெரிவித்துள்ளார். அவர்களும் கார் வாங்கி தருவதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை மைதிலி தன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார்.
அருகில் உள்ளவர்கள் மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காவல்துறையினரிடம் மைதிலி, தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், தீ காயத்தில் இருந்த தன்னை காப்பாற்றாமல் பண ஆசையில் தனது கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து, சகோதரர் சுரேஷை தாக்கிவிட்டு கணவர் அருண் ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வைப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.