திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராடிய இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்தும் 14ஆவது நாளாக நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஈடுபட்டுனர்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதமன் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவ்வளவு உயிர்கள் பறிக்கபடுகின்றன.
அமல்படுத்தப்பட்டால் இன்னும் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும். எனவே தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இச்சட்டதிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எவ்வாறு தமிழ்நாடு அரசு போராட்டங்களைக் கண்டு பின்வாங்கியதோ அதே நிலை குடியுரிமை திருத்தச் சட்டத்திலும் ஏற்படும்.
தனக்குப் பின்னால் பாரதிய ஜனதா இல்லை என்று கூறிக்கொள்ளும் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மத்திய அரசு பின்வாங்காது என்று கூறுவதிலிருந்தும், அதனைக் கமல்ஹாசன் இதுதான் சரியான வழி என்று கூறுவது, 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பானி கதாபாத்திரம் பரட்டைக்கு முதுகு பிடித்துவிடுவதைப்போல கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் மத்திய அரசுக்கு இந்தப் பணியை செய்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: சிஏஏ எதிர்ப்பு: மோடி, ஷா உருவப்படத்தை கிழித்தெறிந்த மாணவர்கள்