திருவாரூரில், சம்பா அறுவடை பணிகள் முடிந்து மாவட்ட முழுவதும் தமிழ்நாடு வாணிபக் கழகம் சார்பில், 463 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. மேலும், கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் அவ்வப்போது சில புகார்களும் வருகின்றன.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சி அருகே, எட்டியலூர் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் திடீர் ஆய்வுசெய்தார். அப்போது கொள்முதல்செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை மற்றும் தரத்தினை ஆய்வுசெய்து, இருப்பு வைக்கப்பட்டுள்ள சாக்குகளின் விவரம், தினசரி கொள்முதல்செய்யப்படும் நெல் மூட்டைகளின் விவரங்களைக் கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 893 மெட்ரிக் டன், நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் ஐந்து லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல்செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கொள்முதல்செய்யப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் விவசாயி வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுவருகிறது.
மேலும் கொள்முதல் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல்செய்யப்பட்டு-வருகிறது என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் ஜெயபிரீத்தா, வட்டாட்சியர் நக்கீரன், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'ஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு மின் இணைப்பு' - அமைச்சர் தங்கமணி தகவல்