திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
' மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. மோடியும், அமித்ஷாவும் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுக தலைமையிலான கூட்டணி பேரணிக்கு காவல் துறையினர் சார்பில் அனுமதி தர மறுத்துள்ளனர். மோடியை திருப்திப்படுத்துவதற்காகவும் அவரது மனம் கோணாமல் நடந்துகொள்வதற்காகவும் இந்த எடப்பாடி அரசானது திமுக பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அனுமதி மறுக்கப்பட்டாலும் இந்தப் பேரணி நடந்தே தீரும்' எனத் தெரிவித்தார்.
எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில் அநாகரிகமான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசானது ஆட்சி அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி, தங்களை உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் எண்ணத்தில் செயல்படுகிறது. ஆனால், அவைகளை முறியடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்' என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களால் இந்தியா எரிகிறது: திமுக தலைவர் ஸ்டாலின்!