இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூரில் அக்கட்சியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில், மத்திய அரசு இப்பகுதி மக்களின் உணர்வுக்கு எதிராக 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதோடு, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு வருகிற ஜூன் மாதம் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை ஒரு நீண்ட நெடிய மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாநில அரசு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது, இத்திட்டத்திற்கு துணை போவது போல தெரிகிறது. ஆகையால் மாநில அரசானது தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இச்செயல்கள் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக போர் தொடுப்பது போல உள்ளது.
தேர்தல் பரப்புரையில் கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறியது மிகப்பெரிய பிரச்னை இல்லை என்றாலும் கூட அதேசமயம் அது தொடர்பாக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா அரசு காந்தி சுட்டுக் கொன்றது சரி என பேசுகிற அளவுக்கு வந்துள்ளது. பாரதிய ஜனதாவின் மத்திய, மாநில தலைவர்களும் பொய்கள் அதிகமாக பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை விட தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை அதிகமாக பொய் பேசுகிறார். அவருக்கு இந்த நேரத்தில் பாரதியார் பாடிய "பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்ற பாடல் உங்களுக்கும் சேர்த்து தான் என்று சுட்டிக்காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.