உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று சுய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நேற்று காலை 5 மணி அளவில் சுய ஊரடங்கு உத்தரவு முடிவுற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்டங்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்தார்.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் மருத்துவத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய துறைகள் இணைந்து, அனைத்து இடங்களிலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எல்லையான அடியக்கமங்கலம் சோதனைச் சாவடி வழியாக வரக்கூடிய பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் என எதில் வந்தாலும் மாவட்டத்திற்குள் வரும் அனைவரின் உடல்நிலையும் சரியாக உள்ளதா, வெப்பநிலை சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் இருவர் உயிரிழப்பு