திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் சுகாதாரத் துறை ஊழியர்கள், காவல் துறையினர், வருவாய் துறை ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குத் திரும்பியதால் அவர்கள் மூலமாக கரோனா தொற்று பரவி வந்த நிலையில் தற்போது கும்பகோணம் காய்கறி மார்க்கெட் மூலமாக அங்கு பணி புரிந்தவர்கள் மூலமாக அதிக அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது .
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் அனைத்து வணிகர்களை அழைத்து கடைகள் நேரம் குறைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்பு அனைத்து வணிகர்களும் ஒன்றிணைந்து வருகிற திங்கட்கிழமை முதல் கடைகள் நேரம் குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் கடைகள் இயங்கும் எனவும், உணவகங்கள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .