144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளான நிலையில், திருவாரூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா வைரசைத் தடுக்கும்வகையில், பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடைவீதிகளில் பொருள்கள் வாங்க வரும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட விஜயபுரம் கடைவீதியில் காய்கறி கடைகள், பழக்கடைகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடை வர்த்தகம் நடைபெற்றுவந்ததையொட்டி, மக்கள் காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக அதிகளவில் கூடுகின்றனர்.
இதனால், கூட்டத்தை தவிர்க்கும்வகையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில் தரைக்கடை வியாபாரம் செய்துவந்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பழைய பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் விற்பனைசெய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று பழைய பேருந்து நிலையத்தில் சமுதாயக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கும் முறையில் ஐந்து மீட்டர் தூரத்திற்கு கடைகள் அமைத்து, அதன்மூலமாக வியாபாரம் செய்துவருகின்றனர்.
மேலும் சமூக இடைவெளிக்காக ஒரு மீட்டர் தூரம்விட்டு வட்டம் போடப்பட்டு அதனுள் நின்று மக்கள் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் கூட்டம் இரண்டு இடங்களாகப் பிரிந்ததால் கூட்டம் குறையத் தொடங்கியது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: '133 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்'- ஆட்சியர் திவ்யதர்ஷனி!