திருவாரூர் மாவட்டத்தில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்தப் பெண் காவலர் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு, இரவு பேருந்தில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவருடன் பணியாற்றும் சற்குணம் (32) என்ற காவலர், அந்தப் பெண் காவலரை செல்போனில் தொடர்புகொண்டு கொரடாச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதன்படி தன்னுடன் பணிபுரியும் காவலர் அழைத்துச் செல்வதாகக் கூறியதால், கொரடாச்சேரி வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி, சற்குணத்துடன் அந்த பெண் காவலர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்றபோது பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக சற்குணம் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் சற்குணத்திடம் இருந்து தப்பித்து அவருடன் பணிரியும் மற்றொரு காவலரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம், அந்தப் பெண் காவலர் புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய விசாரணை நடத்தி, பெண் காவலருக்கு உதவுவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் போதைப் பொருளுக்கு எதிராகவும், பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் காவல் துறையில் வேலை பார்க்கும் காவலர் சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!