மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை வரவேற்றாலும், அத்தள்ளுபடி குறித்து மாவட்ட அளவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல், விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் விவசாயக்கடன் பெறுவதில் பேராபத்து ஏற்படும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக நிலப்பரப்பில் 40% ஆன, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை, கும்பகோணம் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரத்து 35 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேலம், ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும், சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் இனி கடன் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், தள்ளுபடி செய்த கடனின் அளவு குறைவாகவும் உள்ளது. அரசியல்வாதிகள் சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு கூடுதல் பணம் வழங்கி அரசியல் லாபம் தேடுகின்றனர். அரசுப்பணத்தை கொண்டு விவசாயிகள் பெயரில் ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளால், கடன் வழங்கும் அதிகாரத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு ரத்து செய்த மத்திய அரசு, கடந்த ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கடன்களை வழங்கி வருவதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், தற்போது மிகப்பெரிய அளவிலான தொகை முறைகேடு நடைபெற்றுள்ளது.
இந்த ஊழல் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படி முறைகேடு நடைபெற்றுள்ளது விவசாயிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மழைநீர் வடிகாலை மூடாததால் தாய், மகள் உயிரிழப்பு