திருவாரூரில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், அதன் மாநில தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் திருவாரூர் மாவட்டத் தலைவராக ஆர்.வி.எல். ரவிச்சந்திரன், செயலாளராக சேகர், பொருளாளராக செந்தில் அரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார், "கட்டுமானத் துறை பாதுகாக்கப்பட வேண்டுமானால், அதற்கென தனித்துறை, தனி அமைச்சகம் இருக்க வேண்டும். அண்மைக் காலமாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றுமணல் கிடைக்கவில்லை என்றால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். எம் சான்ட் எனப்படும் செயற்கை மணல் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஆனால் எம் சான்ட் தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு தரமான எம் சான்ட் மணல் தாராளமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கக்கூடியது. ஆனால் அந்த அறிவிப்பில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. எனவே 341 ஒப்பந்தங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாழாகிவிடும். ஏற்கெனவே, அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல் நிகழ்காலத்தில் அனைத்துத் திட்டங்களும் தடைசெய்யப்பட்டு விவசாயத்தை மட்டும் பாதுகாக்கக்கூடிய நோக்கத்தோடு இருந்தால்தான், அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமையும்" என்றார்.
இதையும் படிங்க: சிறுமலையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் - வனத்துறை அமைச்சர்