திருவாரூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் இன்று (நவ.30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.
ஹெக்டருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கனமழையின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட நெல்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட குருவை நெல் பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் அறிவித்தது. அந்த நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களை ஓஎன்ஜிசிக்கு தாரை வார்க்க மறைமுகமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசே! இஸ்மாயில் குழுவின் அறிக்கையை வெளியிடுக: டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கிடும் இஸ்மாயில் குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை அதனை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ஆகவே உடனடியாக, இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் நிலம் கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு போடுவது ஏற்கத்தக்கதல்ல என கூறினார்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், வழங்க வலியுறுத்தி ஜனவரி 1 தஞ்சாவூரில் தொடங்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் பிரச்சார பயணம் நடத்தப்படும்” என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “நடிகை குஷ்பு அனாவசியமாக பேசுகிறார்”.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்!