திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் பிரதம மந்திரியின் வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9 கோடிய 5 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 2 ஆயிரம் என்று ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவது இந்த திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் சிறப்பு விவசாயிகளுக்கு நிதி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவது இத்திட்டத்தின் நோக்கம். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 40- லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இப்படி அற்புதமான திட்டம் நலிவுற்ற விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது. இதில் எந்தவித இடையூறுமின்றி விவசாயம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இணையதளத்தில் பதிவு செய்த அரசு மேற்கொண்டுள்ள வழிகளை தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி சில விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த தொகை உதவித்தொகை பெற்றுத் தருகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டத்தை சில குறுக்கு வழியில் மோசடி செய்துள்ளனர். இந்த நிதியை பயன்படுத்த நினைப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு கிசான் திட்ட நிதி அனைத்து விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.