திருவாரூர்: சமீபத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சனாதனம் குறித்த இந்த கருத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருவாரூரில் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு திமுக சார்பில் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த கருத்தரங்கில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்று இந்த கருத்தரங்கில் மாணவிகள் சனாதன எதிர்ப்பு குறித்த தங்களது ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக திருவாரூர் அருகிலுள்ள கிடாரங்கொண்டான் திரு.வி.க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு ராஜாராமன் அனைத்து துறை தலைவர்களுக்கும் வகுப்புகளில் வாசிக்க கேட்டுக் கொண்டு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த சுற்றறிக்கைக்கு வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி முதல்வரை கண்டித்து இன்று செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அறிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து கல்லூரி முதல்வர் ராஜாராமனிடம் கேட்ட போது சுற்றறிக்கையை அனுப்பியது உண்மை தான் என்றும், சனாதனம் குறித்த கருத்துக்களை மாணவ மாணவிகள் அந்த கருத்தரங்கில் தெரிவிக்க வேண்டும் என்று மட்டுமே சுற்றறிக்கையை அனுப்பப்பட்டதாகவும் அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீண்டும் சுற்றறிக்கையை மாற்றி அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார் அதில் கூறியுள்ளதாவது, கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கடந்த 11ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
எனினும் கல்லூரி மாணவிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே மேற்கொண்ட பொருள் குறித்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கல்லூரி முதல்வர் மாற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனிடையே மாலை திருவாரூரில் அருகே உள்ள கலைஞர் கோட்டத்தில் நடப்பதாக இருந்த சனாதனம் குறித்த கருத்தரங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!