திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 எனப் பல ஆயிரம் ரூபாய் கமிஷன் பெறுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர் நந்தகோபாலன் தலைமையில் லாரியை சிறைப்பிடித்து இரவு முதல் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
அதேபோல் அசோசம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும் சோதனை நடைபெற்றது. மொத்தமாக சோதனை முடிவில், கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாட் ரொக்கப்பணம், மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல்வேறு போராட்டம் நடத்திய பிறகும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முறையாக கொள்முதல் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி