மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர், நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டமாக AICIL பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிறுவனத்தின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 543 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு செலுத்தப்பட்டுள்ளது. பயிர் அறுவடை முடிந்து மூன்று மாத காலத்துக்குள் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற விதியுள்ள நிலையில், தற்போது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதாக வேளாண் துறை அலுவலர்கள் தெரிவத்திருக்கின்றனர்.
இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வேளாண் கோட்டத்தில் 31, கோட்டூர்புரத்தில் 21, முத்துப்பேட்டை 3, திருத்துறைப்பூண்டி 4, நன்னிலம் 2, கொரடாச்சேரி 1, நீடாமங்கலம் 2 சேர்த்து 68 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலுமாக பயிர் காப்பீடு வழங்க இயலாது என பயிர் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வேளாண் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திலிருந்து, இது போன்று கிராமங்கள் முற்றிலும் விடுபடுவதற்கு வாய்ப்பில்லை என வேளாண் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இது குறித்த தகவல் பரவியதையடுத்து விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகி சம்பந்தபட்ட அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர்.