இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான். ஆனால், முதுகெலும்பே உடையும் நிலையில் இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் இன்னும் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் பல கிராமங்கள் அடிப்படை வசதி என்றால் என்னவென்றே தெரியாமலேயே இன்றுவரை இருந்துவருகின்றன என்பதுதான் வேதனை தரும் நிகழ்வாகும். அப்படி, வாழ்ந்துவரும் ஒரு கிராமம் தான் 'கரையான் திடல்'.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள விஷ்ணுபுரம் சாலையோரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்துவந்தனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கும்பகோணம்-பூந்தோட்டம் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மாற்று இடம் தருவதாகக் கூறி, அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதே விஷ்ணுபுரம் அருகிலுள்ள 'கரையான் திடல்' என்ற காட்டுப் பகுதிக்குள் குடியமர்த்தினர். அப்பகுதிக்கு குடிபெயர்ந்துவந்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றுவரை மின்சார வசதி இல்லாமல் பழைய நிலையில்தான் வாழ்ந்துவருகின்றனர்.
இந்தக் கரையான் திடல் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருக்கின்றனர். மின்சார வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் தங்களது தேர்வு காலங்களில் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் இந்தக் கிராமத்தில் ஆண்கள் மிகவும் குறைந்த அளவே காணப்படுகின்றனர்.
காரணம், இரவு நேரங்களில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதோடு, இது போன்ற விஷ ஜந்துக்கள் கடித்து ஆண்கள் பலர் மரணமடைந்துள்ளனர்.
இக்கிராமத்திற்கு அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதற்கும், சுப நிகழ்ச்சிகள் நடைபெற மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க வருவதற்கும் தயங்குவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.
இது குறித்து கரையான் திடல் கிராம மக்கள் கூறுகையில், "நாங்கள் விஷ்ணுபுரம் சாலையோரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் புதிய வீடு கட்டித் தருகிறோம் என்று கூறி, மாற்று இடமாக 'கரையான் திடல்' காட்டுப் பகுதிக்குள் கொடுத்தனர்.
அந்தப் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறோம். அதிலும் வீடுகளுக்கு சுவரில்லாமல் கீற்றுக் கொட்டகைதான் அமைக்க வேண்டும் என அலுவலர்கள் கூறியதால், தற்போது வரை சுவர்கள் சரியாக அமைக்காமல் கீற்று கொட்டகை அமைத்து வசித்துவருகிறோம்.
இதனால், மழைக் காலங்களிலும் தண்ணீர் தெருவுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும் தினந்தோறும் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டுவருகிறோம். குறிப்பாக, இங்கு மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், எங்கள் குழந்தைகளுக்குப் பள்ளி ஆசிரியர்கள் தண்டனை வழங்குகின்றனர்.
எனவே, இது குறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் முதல், அமைச்சர்கள் வரை 100-க்கும் மேற்பட்டோரைச் சந்தித்து மனுக்களைக் கொடுத்தோம். அதேபோல் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்து கடந்த பல ஆண்டுகளாக, இன்றுவரை போராடிக் கொண்டுதான் வருகிறோம்.
இதுவரை அரசும் சரி, அரசு அலுவலர்களும் சரி ஒருமுறைகூட எங்கள் கிராமத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் நேரங்களில் மட்டுமே எங்கள் கிராமத்தினரை அரசியல்வாதிகளுக்குத் தெரியும். மற்ற நேரங்களில் திரும்பிகூடப் பார்க்க மாட்டார்கள். தற்போது எங்களுக்கு வேண்டியதெல்லாம் மின்சாரம் மட்டும்தான். அதைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை.
மேலும் மாவட்ட நிர்வாகமோ அல்லது தமிழ்நாடு அரசோ மக்களின் உயிர்ப் பலியை குறைக்க வேண்டுமென்றால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படி மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென்றால் எங்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை அரசிடம் திருப்பி ஒப்படைத்துவிடுவோம். மேலும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம்" என்று குமுறினர்.
இதையும் படியுங்கள்: 12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?