திருவாரூர்: நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன், மன்னார்குடியில் பேருந்து நிலையம் முன்பு செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று (ஏப்.19) இரவு கடை முடிந்தவுடன், ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கடையை மூடிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது மதுக்கூர் சாலையில் பாலமுருகன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு பேர் அவரை வழி மறித்து கண்ணில் மிளகாய் பொடி தூவியும், கட்டையால் அடித்தும், அவரிடமிருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து சாலையில் கிடந்த பாலமுருகனை, அந்த வழியாக சென்ற ஒருவர் மீட்டு, மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மேலும் இதுகுறித்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கபட்ட பாலமுருகன் கூறுகையில், தன்னைத் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளையடித்த இருவரில் ஒருவர் தன்னுடன் இணைந்து உணவுக்கடை நடத்திவந்த விவேகானந்தன் தான் என்பதைத் தெரிவித்தார். பாலமுருகன் கூறியதை வைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாக்கடையில் வீசப்பட்ட பிரதமர் மோடியின் படம்!