திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் புதுதெருவை சேர்ந்தவர் பைசல் (16). அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதே பள்ளியில் படிக்கும் இவரது நண்பருக்கும் சக மாணவன் செல்வேந்திரனுக்கும் இடையே வகுப்பறை இருக்கையில் அமர்வது குறித்து இரண்டொரு தினங்களாக மோதல் போக்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து செல்வேந்திரனும், அவரது நண்பர்கள் இருவரும் பைசலின் நண்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அதைத் தடுக்க முயன்ற பைசலை செல்வேந்திரன் தான் மறைத்துவைத்திருந்த கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். இதில், தலை, மார்பு, முதுகு என எட்டு இடங்களில் பலத்த காயமடைந்த பைசல், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து செல்வேந்திரனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.