திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மையம் சார்பாக உலக விண்வெளி வார விழா, கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த விழாவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக உலக விண்வெளி வாரவிழா, கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தமுறை ராக்கெட் ஏவுகணை செலுத்தும் நிகழ்வினை நேரடியாக காண்பதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு படிக்க மட்டும் அனுப்பக் கூடாது. கற்பனைத்திறனை மாணவர்களிடத்தில் கொண்டு வர வேண்டும். மேலும், அவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்த நாம் கனவுகண்ட பணியைச் செய்யும்போதுதான் நம்முடைய பணி சிறக்கும்" என்றார்.
உலக விண்வெளி வார விழாவின் முக்கிய நிகழ்வாக அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட், செயற்கைக்கோள்களின் மாதிரிகள் கல்லூரி வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சீன அதிபர் வருகை - புதியப் பூங்கா, சுவர் ஓவியம் என அதிரடி காட்டும் சென்னை!