திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டு காய்கறி, மளிகைப் பொருள்கள், நடமாடும் வாகனம் மூலம் அனைத்து பகுதிகளிலும் வீடு தேடி விற்பனை செய்துவருகின்றனர். ஆனாலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி சிலர் பல்வேறு இடங்களில் காய்கறி பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், திருவண்ணாமலை நகரில் உள்ள தேரடி வீதி பகுதியில் வீட்டிலேயே காய்கறியை ரகசியமாக வைத்து பெண்மணி ஒருவர் விற்பனை செய்வதாக காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் காவல் துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் காய்கறிகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் அனைத்தையும் வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.
இதுபோன்று ரகசியமான முறையில் காய்கறி கடை, மளிகைக் கடை மற்றும் இறைச்சிக் கடைகளை நடத்தி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.