திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் கிராமம் அருகே உள்ள செல்வபுரம் பகுதியில், தண்ணீர் தேடி வந்த காட்டுப்பன்றி, கிணற்றில் தவறி விழுந்ததால் வனத்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் பத்திரமாக இறங்கி, காட்டுப்பன்றியை கயிற்றால் கட்டி, லாவகமாக மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த காட்டுப்பன்றியை வனப்பகுதிக்கு, எடுத்துச்சென்று பத்திரமாக விட்டனர். வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் நீர் நிலைகளைத் தேடி வருவது தொடர்கதையாகி உள்ளது.
எனவே, வனத்துறையினர் காட்டு விலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் நீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் விவசாயிகள் விளைவித்துள்ள வேர்க்கடலை போன்ற பயிர்களை உண்பதற்காக வந்தது என்றும் அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வன விலங்குகளிடமிருந்து விவசாயிகளின் பயிர்களையும் காப்பாற்றுவதற்கு வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை துரத்திக் கடித்த நாய்கள்!