திருவண்ணாமலை : தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை திருவிழா இன்று (நவ. 26) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அக்னி ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இன்று நவம்பர் 26ஆம் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையில், மகா தீபமும், அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் ஏற்றப்படும்.
10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மலை நடைபெற்றது. முன்னதாக நவம்பர் 23ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்ற நிலையில் அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(நவ. 26) அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த, சுமார் 5 அடி உயரமுள்ள தீபம் ஏற்றும் கொப்பரை, திருவண்ணாமலை கோயிலின் கிளி கோபுரம் அருகே உள்ள நந்தி சிலை முன்பு, சிறப்பு பூஜைகள் செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள், தங்களின் பக்தி பொங்க அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்று துதி பாடினர். மகா தீப நிகழ்வு முடிந்தவுடன் இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு உள் மற்றும் வெளி மாநிலங்ம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
கார்த்திகை தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அவசர எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும், குழந்தைகள் காணாமல் போனால் 9342116232, 8438208003 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்பரை!