திருவண்ணாமலை: அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைத்திருந்த கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
திருவண்ணாமலை நகரின் தேரடி வீதியில் 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூம்புகார் துணியகம் உள்ளது. 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய ஷோரூம் பூம்புகார் துணியகம் இன்று திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏசி பயன்பாடு இல்லாத சிறிய துணிக் கடைகள் திறந்து கொள்ளலாம் என்றும், ஏசி பயன்பாடு உள்ள மிகப்பெரிய ஷோரூம் துணிக் கடைகள் திறக்கக் கூடாது என்பது அரசின் உத்தரவாகும்.
இந்த உத்தரவுகளையும், வழி முறைகளையும் பின்பற்றாமல், விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அமுலு, திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வந்து 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய பூம்புகார் துணிக்கடையை மூடி சீல் வைத்தனர்.
இதேபோல் தேரடி வீதியில் உள்ள மோத்தி காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் செல்போன் கடை, செல்போன் உதிரிபாகம், எலக்ட்ரானிக் பழுதுபார்க்கும் கடை, வாட்ச் கடை, டிவி மெக்கானிக் கடை என மொத்தம் 20 கடைகள் திறந்து விற்பனை நடைபெற்று வந்ததை அடுத்து அந்த வணிக வளாகத்தில் உள்ள 20 கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.