திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. வனிதா சர்வதேசப் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கர், சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் அயனிங் கார்ட்டை(Solar Ironing Cart) கண்டுபிடித்துள்ளார்.
சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடிக்கும் யோசனை வினிஷாவுக்கு 12 வயதில் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, துணி தேய்ப்பவர்கள் இஸ்திரிப் பெட்டிக்கு கரியை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து சிந்தித்தபோதே இந்த ஐடியா வினிஷாவுக்கு தோன்றியுள்ளது.
தனது ஐடியாவை சிறந்த கண்டுபிடிப்பாக மாற்ற சுமார் நான்கு ஆண்டுகள் வினிஷா கடுமையாக உழைத்துள்ளார். இவரது இந்த சாதனைக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை வழங்கும் Dr APJ Abdul Kalam IGNITE Awards கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
ஸ்வீடன் நாட்டின் “மாணவர் காலநிலை அறக்கட்டளை (Children's Climate Foundation)” சார்பில், ‘சில்ட்ரன்ஸ் க்ளைமேட் 2020 (Children's Climate 2020) என்ற விருதும் கிடைத்துள்ளது. ஸ்வீடனின் சுற்றுச்சூழல் அமைச்சரும் துணைப் பிரதமருமான இசபெலா லோவின் கலந்துகொண்ட இணையவழி நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. இது சுற்றுச்சூழலைக் காக்கும் விதமான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
‘சில்ட்ரன்ஸ் க்ளைமேட் 2020' என்றால் என்ன?
‘சில்ட்ரன்ஸ் க்ளைமேட் 2020' விருது என்பது உலக அளவில் சுற்றுப்புறச் சூழலின் மீது அக்கறை கொண்ட பள்ளி மாணவர்களுக்கான ஓர் சர்வதேச பருவநிலை விருதாகும். பருவநிலையை காக்கும் சிறந்த கண்டுபிடிப்புகளை படைத்த 12 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொண்ட நடுவர் குழு விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவிக்கிறது.
உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு வழங்கப்படும் ஸ்டாக்ஹோமில் உள்ள சிட்டி ஹாலில்தான் இளம்தலைமுறையை கவுரவிக்கும் ‘சில்ட்ரன்ஸ் க்ளைமேட் 2020' விருதும் வழங்கப்படுகிறது.
ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
"ஐந்து வயதில் என் பெற்றோர் வாங்கித் தந்த ஸ்பேஸ் என்சைகாலோப்பீடியாவினால் (Space Encyclopedia) எனக்கு அறிவியல் மீது ஈடுபாடு வந்தது" என புன்சிரிப்புடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் வினிஷா. "பன்னிரெண்டு வயதில் தான் எனக்கு சோலார் அயனிங் கார்ட் செய்ய வேண்டும் என்ற ஐடியா எழுந்தது. இந்த கண்டுபிடிப்பு நிறைவு பெற ஏழு மாதங்கள் ஆகின.
பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது துணி தேய்பவர்கள் தெருவில் கரியை (Charcoal) காய வைத்திருந்தார்கள், பிறகு அதை குப்பையில் கொட்டினர். இதை பார்த்ததும் கரி பயன்பாட்டினால் என்ன விளைவுகள் உண்டாகும் என்று தேட ஆரம்பித்தேன். அதன் விடையாக முதலில் கரி எரிப்பதனால் வெளியாகும் புகையினால் சுவாச பிரச்னை ஏற்படுகிறது, பெருமளவில் மரங்கள் வெட்டப்படுவதால் காடு அழிகிறது. குப்பையில் போடுவதால் நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் மாசுபடுகிறது என்பதை கண்டறிந்தேன். இதுதான் சோலார் அயனிங் கார்ட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது" என்றார்.
சோலார் அயனிங் கார்ட் எப்படி இயங்குகிறது?
இந்த கார்ட்டின் மேல் பகுதியில் வழக்கமாக உள்ள சோலார் பேனல் (Solar Panel) பொருத்தப்பட்டிருக்கும். இதில் சூரிய சக்தி படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் கார்ட்டில் உள்ள பேட்டரிக்கு சென்ற பிறகு அயர்ன் பாக்சிற்கு வருகிறது. இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்பட்டு மழை நேரங்களிலும், வெயில் குறைவாக இருக்கும் நேரங்களிலும், அயர்ன் பாக்ஸ் சிறப்பாக இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கரி உதவியுடன் அயர்ன் செய்பவர்களுக்கு, கரி வாங்கும் செலவு மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகும். இந்த சோலார் அயனிங் கார்ட்டை வாங்குவதன் மூலம் அந்த செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். இதில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டாலும் எலக்ட்ரிசியனை கொண்டு எளிதில் பழுது நீக்கிக் கொள்ளலாம்.
"ஆக்டிவிசத்தைவிட இன்னோவேஷனிலேயே எனக்கு ஆர்வம் அதிகம்"
தொடர்ந்து பேசிய வினிஷா, "எனக்கு ஆக்டிவிசத்தில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை, காரணம் என்னவென்றால் தெருவில் இறங்கி போராடலாம், இதன் மூலம் பருவநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். ஆனால் போராடுகிறோமே தவிர நாம் பொறுப்புணர்வுடன் இல்லை, அதனால் நானே பொறுப்பேற்றுக்கொண்டு என்னை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்கிறேன்.
வருங்கால திட்டம்
கரோனா வைரஸ் போன்ற தொற்று ஒருவர் கை தொடுதல் மூலமாகவே எளிதில் பரவிவிடுகிறது. ஸ்விட்சை தொடுவது மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்நிலையை மாற்ற டச்லெஸ் ஸ்விட்ச் (Touchless Switch) உருவாக்க முயன்றுவருகிறேன்.
எந்த வயதினராக இருந்தாலும் இந்த உலகம் எல்லோருக்கும் சொந்தமானது. எனவே பள்ளி மாணவர்கள் தங்களை சுற்றி என்ன பிரச்னை உள்ளது, அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
பொதுமக்கள் பெட்ரோல் வாகனங்களை குறைத்து, மின்சார வாகனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் நம் நாட்டில் பெட்ரோல் பங்க் இருக்கும் அளவிற்கு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் இல்லை. நம் நாட்டில் பெட்ரோல் பங்க் அளவுக்கு இந்த சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தின் சிறந்த மாணவருக்கான விருதை முன்னாள் மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி வினிஷாவுக்கு வழங்கினார். இதுதவிர சென்சார் மூலம் மனித உடல் வெப்பத்தை உணர்ந்து தானியங்கி முறையில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போனிற்காக கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் மற்றும் கலாம் டெக்னிகள் யுனிவர்சிட்டி சார்பாக பிரதாப் பி தேவனூர் இன்னோவேஷன் விருதினையும் பெற்றுள்ளார்.
"கோடி ரூபாய் அளிக்காத மன திருப்தியை கண்டுபிடிப்புகளே தரும்"
இவ்வாறு பல அசாதாரண கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ள வினிஷாவின் தந்தை உமா ஷங்கர் சத்யநாராயணன் பேசுகையில், "சிறு வயதில் இருந்தே அறிவியல் சார்ந்த புத்தகங்களை படிக்க ஊக்கப்படுத்தினோம். அதுவே இத்தகைய கண்டுபிடிப்பிற்கு உதவியாக இருந்தது.
நான் என் மகளுக்கு ஒன்றை மட்டும் அடிக்கடி கூறுவேன். வரும் காலத்தில் நீ படித்து என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நாம்மால் முடிந்த பங்களிப்பை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறு கண்டுபிடிப்புகள்தான் சமூகத்தையே மாற்றும். இல்லையென்றால் 500 ஆண்டுகளானாலும் சமூகம் இப்படியேதான் இருக்கும்.
பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்து நம் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது. கோடி ரூபாய் பணம் அளிக்காத மன திருப்தியை இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பிள்ளைகளுக்கு தரும்" என்றார்.
மேலும், தற்போது வினிஷாவின் கண்டுபிடிப்பின் மூலம் வரவிருக்கும் ராயல்டி தொகையை பல புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
வினிஷா படித்துக்கொண்டிருக்கும் எஸ்கேவி வனிதா சர்வதேச பள்ளியின் முதல்வர் பிரதிபா "வினிஷாவின் கவனித்தல் திரண் உண்மையாகவே வியக்கத்தக்கது. இந்த சிறு வயதில் சளிக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்ற வினிஷாவின் சிந்தனை அளப்பரியது" என்கிறார் மகிழ்ச்சியுடன்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் வீணாக காலத்தை கழிக்கும் சில மாணவர்களுக்கு மத்தியில், புத்தக வாசிப்பு, தொடர் முயற்சி காரணமாக பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவர நினைக்கும் மாணவி வினிஷாவின் முயற்சி பாராட்டத்தக்கது.
இதையும் படிங்க: கணினி உற்பத்தியில் இந்தியா இறங்கினால் அத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் - விற்பனையாளர்கள் கருத்து