திருவண்ணாமலை: தனியார் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை அடைய உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால் மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்து தான் இந்தியா கூட்டணியின் நோக்கமாக உள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், முதலமைச்சர் உடனடியாக அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற மற்றும் அரசு அதிகாரிகளை துரிதப்படுத்தி மக்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நீர் தேங்காத வண்ணம் தண்ணீரை வடிய ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளை செய்திட ஆணையிட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்துக்களுக்காக நாங்கள் தொண்டு ஆற்றுவதாக சொல்லிக்கொள்ளும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு வகையில் இன உணர்வை பரப்பி வருவதாகவும், அவர்களுக்கு இந்து கோயில்கள் இடிக்கப்படுவது பற்றி கவலைபடவில்லை. இலங்கையில் பௌத்த விகார்கள் கட்டுவதன் மூலம் சிங்களர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றனர்.
ஆனால் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவை சேர்ந்தவர்கள் அதை பற்றி பொருட்படுத்தாமல் தமிழ் தேசிய இன உணர்வை மங்கச் செய்யும் வகையில், மத வெறி உணர்வை தொடர்ந்து விதைத்து வருவது எனக்கு வேதனனையளிக்கிறது.
மேலும், விக்னேஸ்வரனின் அறிக்கையை வரவேற்பதாகவும், இந்திய அரசு தமிழகர்களின் தாயகமான வடக்கு தெற்கு மாகாணங்களை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகின்ற பகுதிகளில் பல்வேறு நெருக்கடிகளை தருகின்றனர். குறிப்பாக ஆளுநர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நெருக்கடி தருவதை தமிழ்நாடு மக்கள் தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மேல்மா சிப்காட் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள அருள் ஆறுமுகத்தை சந்தித்த சுப.உதயகுமார்!