திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே உள்ள ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. இவர் 27 ஆடுகளை வளர்த்துவந்தார். இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதிகாலை திடீரென ஆடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து ஆட்டுப் பட்டிக்கு விரைந்து சென்று பார்த்தபோது 9 ஆடுகள் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு விஜயா அதிர்ச்சி அடைந்தார். அடையாளம் தெரியாத விலங்கு ஆட்டுப் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்திருப்பது தெரியவந்தது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் அண்டம்பள்ளம் கால்நடை மருத்துவர் பொறுப்பு ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆடுகளை விலங்கு கடித்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் என்ன விலங்கு என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
இதேபோல் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இதே ஆட்டு பட்டியில் விஜயாவுக்கு சொந்தமான 15 ஆடுகளை அடையாளம் தெரியாத விலங்கு கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.