திருவண்ணாமலை: கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திருவண்ணாமலை நகரில் 2 ஏடிஎம் மையங்கள், கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதியில் தலா 1 ஏடிஎம் மையம் என மொத்தம் 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் சுமார் 75 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வாகனத் தணிக்கை, சுங்கச்சாவடி சோதனை, தங்கும் விடுதிகளில் ரைடு, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பதற்றம் என திருவண்ணாமலை காவல் துறை உள்பட தமிழ்நாடு காவல் துறையே பரபரப்பானது.
இதனிடையே வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை காவல் துறையினர் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
அது மட்டுமல்லாமல், கொள்ளை அடித்த கும்பல் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும், கொள்ளை கும்பலின் தலைவன் என ஒரு நபரின் புகைப்படத்தையும் காவல் துறை வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியானாவில் வைத்து கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குதரத் பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகிய இருவரையும் திருவண்ணாமலை காவல் துறையினர் கோலாரில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு, அதே நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1இல் நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். எனவே, திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாட்கள் நீதிமன்ற காவல்!